உன் மனம் விரும்பினபடி வாய்க்கும்
உன் மனம் விரும்பினபடி வாய்க்கும் (சங் 37:5)
“அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக” (சங் 20:4)
கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பான சகோதர சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
கர்த்தர் இம்மாதம் உங்களுடைய மனவிருப்பங்கள் எல்லாவற்றையும் நிரைவேற்றப் போகின்றார். உங்கள் மனதிலே அநேக காரியங்களை நீங்கள் விரும்பிக் கொண்டு இருக்கலாம் தேவன் இவையெல்லாம் வாய்க்கச் செய்தால் நலமாயிருக்குமே என்று எண்ணி ஜெபித்துக் கொண்டிருக்கலாம், தேவன் உங்களுடைய ஜெபத்தை கேட்டார். உங்கள் மனவிருப்பங்கள் எல்லாவற்றையும், இம்மாதம் வாய்க்கச் செய்யப் போகின்றார் அல்லேலூயா.
“நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்”. (யோவா 15:7)
பிரியமானவர்களே, இவ்வசனம் வேதாகம மொழிபெயர்ப்பிலே “ நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைக்கும்” என்று சொல்லப்பட்டுள்ளது.
அன்பான தேவனுடைய பிள்ளைகளே நம்முடைய மனவிருப்பம் நமக்கு நிறைவேற்றப்பட வேண்டுமானால். நாம் தேவனில் நிலைத்திருக்க வேண்டும் அதாவது தேவனுடைய வசனங்களை வாசித்து, தியானித்து அதின்படி செய்கின்றவர்களாய் இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையின்படியே ஜீவித்து, அவருக்கு பிரியமானவைகளையே நாம் செய்கின்றவர்களாய் இருக்கவேண்டும்.
அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய நிருபத்தில், பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். (3யோவா 2) என்று எழுதுகின்றார். பிரியமானவர்களே, நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகித்திருக்க வேண்டுமாயின் நம்முடைய ஆத்துமா தேவனோடுள்ள உறவிலே சுகித்திருக்க வேண்டும். ஆகவே தான் தாவீது, பத்சோபாளிடத்தில் பாவம் செய்ததினால் மனங்கசந்து தேவனிடம் ஜெபிக்கும் போது “ இதோ உள்ளத்தில் உண்மயாயிருக்க விரும்புகிறீர் அந்தக் காரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்”.(சங் 51:6) என்றும் “ தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்; நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்”. (சங் 51:10) என்றும் கூறி ஜெபிக்கின்றார்.
அன்பான தேவனுடைய பிள்ளைகளே கர்த்தர் நம்முடைய மனவிருப்பங்களையெல்லாம் வாய்க்கச் செய்ய வேண்டுமாயின் நம்முடைய இருதயம் சுத்தமாக்கப்பட வேண்டும். தேவனுடைய வசனத்திலே நமது இருதயம் சுத்தமாக்கப்படுகின்றது.
“ நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுது சுத்தமாயிருக்கிறீகள்” (யோவா 15:3)
என்று இயேசு சொல்கின்றார். ஆகவே ஆண்டவருடைய உபதேசம் நம்மை சுத்தப்படுதுகின்றதாய் இருக்கின்றது. ஆகவே நாம் எப்பொழுதும் தேவனுடைய வசனங்களை வாசிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும் . யோவான் 1 – ம் அதிகாரம் 45 முதல் 50 வரையிலான வசங்களை வாசிக்கும்போது, நாத்தான்வேல் என்பவனை இயேசு கண்டு “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்கிறார். உடனே நாத்தான்வேல் என்னை நீர் எப்படி அறிவிர் என்று கேட்கிறார். அதற்கு இயேசு, நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன் என்கிறார்.
அக்காலங்களில் நியாயப்பிரமாண புத்தகத்தை வாசிக்கும் போது அத்தி மரத்தின் கீழிருந்து தான் வாசிப்பார்களாம். அதுபோல் தான் இந்த நாத்தான்வேளும் அத்திமரத்தின் கீழிருந்து தேவனுடைய உபதேசங்களை தியானிக்கும்போது, இயேசு அவரை கண்டிருக்கிறார். அன்பானவர்களே, நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது தேவன் நம்மோடு பேசுகின்றார். தேவனுடைய வசனங்களெல்லாம் ஜீவனுள்ளவைகள். அது நமக்கு ஜீவனாய் இருக்கிறது. அந்த வசனமே நம்முடைய மனவிருப்பங்களை நிறைவேற்றுகின்றது.
அன்பானவர்களே, உங்களுடைய மனவிருப்பங்கள் தேவன் நிறைவேற்றுவதில் நீங்கள் சந்தோஷமாயிருக்கிறீர்கள். ஆனால் தேவனுடைய மனவிருப்பத்தின்படி அவருடைய வசனங்களை வாசித்து கைக்கொள்ள நீங்கள் விருப்பமாயிருக்கின்றீர்களா!
சிலருடைய் வேதாகமத்தை அவர்கள் திறந்து பார்த்தே பல மாதங்கள் ஆகியிருக்கும். சிலர் காலையில் எழுந்து தங்களுடைய கடமைகளை எல்லாம் சரியாக செய்து முடித்துவிட்டு, வேலைக்கு போக நேரமாயிருச்சு என்று சொல்லிவிட்டு வேதாகமத்தை வேகமாக திறந்து கண்ணில்பட்ட ஒரு வசனத்தை அவசரமாக வாசித்துவிட்டு திருப்தியோடு சென்று விடுவார்கள்.
நம்முடைய சொந்த வேலைகளை எல்லாம் செய்ய நமக்கு நேரமுண்டு ஆனால் வேதாகமத்தை வாசிக்க மட்டும் நேரம் கிடைப்பதில்லை. சரி, வேதம் தான் வாசிக்கமுடியவில்லை வசனங்களை கேட்பதற்கு ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கு பெறுவார்களா என்று கேட்டல், தனியாக பேசி ஆலோசனை மட்டும் தான் கேட்க முடியும். கூட்டங்களுக்கு வந்து அமர்ந்திருந்தால் எங்களுடைய அந்தஸ்து என்னவாகும் என்று சொல்வார்களே. இவர்களுடைய மனவிருப்பத்தை மட்டும் தேவனால் எப்படி நிறைவேற்ற முடியும்.
பெற்றோருடைய சொல்லிற்கு கீழ்ப்படிந்து, தாய் தகப்பனுடைய வார்த்தையின்படியே நடக்கிற பிள்ளைகளுக்குத் தான் கேட்பதெல்லாம் கிடைக்கும். சொல் கேளாத பிள்ளைக்கு பிரம்படி தான் கிடைக்கும். பொல்லாதவர்களாகிய நாமே நமது பிள்ளைகளிடத்தில் நல்லவைகளை எதிர்பார்த்தால், பரிசுத்தமுள்ள தேவன் அவருடைய பிள்ளைகளாகிய நம்மிடத்தில் எவ்வளவு பரிசுத்தத்தை எதிர்பார்ப்பார்.. அவருடைய எதிபார்ப்பின்படி நடக்கிறவர்களுடைய மனவிருப்பங்களை தான் தேவன் நிறைவேற்றுவார்.
ஆகவே தேவனுடைய பிள்ளைகளே, உங்களுடைய இருதயம் தேவனுடைய வசனத்தின் மேல் தாகமாயிருக்கட்டும். வயிறு பசி எடுத்தால் வேகமாக சென்று சாப்பிடுவது போல உங்கள் இருதயம் பசியெடுத்து வேத வசனங்களை ஆகாரமாய் உட்கொள்ள பழகுங்கள். தேவனுடைய வசனங்கள் உங்கள் இருதயத்தை நிரப்ப நிரப்ப தூய்மை பெருகும். தேவ வசனத்தினால்தான் சத்துருவை ஜெயிக்க முடியும்.
அன்பானவர்களே, உங்கள் மன விருப்பங்கள் நிறைவேற்றப்பட தேவனுடைய வார்த்தையில் நீங்கள் நிலைத்திருக்க வேண்டும். வேதத்தை எப்போதும் வாசித்து தியானிக்கின்றவர்களாய் இருக்கவேண்டும். திருச்சபைகளில் கன்வென்ஷன் கூட்டங்கள், நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்படுவதெல்லாம் தேவ வசனங்கள் விதைக்கப்படுவதற்காகவே. ஆனால் இன்று வசனங்கள் பிரசங்கிக்கப்படுவது குறைந்து இசையின் மோகத்தினால் ஆடலும் பாடலும் தான் ஆடம்பரமாகி வருகின்றது. இவைகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்நிலை திருச்சபைகளில் மாற்றப்பட்டு, வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். “வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது”. (நீதி 28:9)
நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய்; ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்”. (ஓசி 4:6).
“ நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக் கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும், அவைகளைக் குறித்துப் பேசி” (உபா 6:7).
அன்பு சகோதரனே, சகோதரியே நம்முடைய தேவனுடைய விருப்பம் இதுதான். இதின் படி நாம் நடந்தால் நம்முடைய மனவிருப்பத்தின்படியும் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். இப்போது கீழ்காணும் ஜெபத்தை முழங்காலில் நின்று ஏறெடுப்போம்.
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே உங்களுக்கு ஸ்தோத்திரம். உங்களுடைய மனவிருப்பத்தினை எனக்கு தெரியப்படுத்தினபடியால் உம்மை துதிக்கின்றேன். இரவும் பகலும் உமது வேதத்தில் தியானமாயிருக்க எனக்கு கிருபை தாரும். உம்முடைய வசனங்களை வாசிக்குபோது நீர் என்னோடு பேசி என்னை ஆசீர்வதியும். என்னுடைய மனவிருப்பங்கள் எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். அதின் படி என்னை நீங்க ஆசீர்வதிக்கிறமைக்காக உங்களுக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)