பெண்கள் பகுதி
அற்பமானவளின் ஆசை
நீ பயப்படாதே உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன். என்று நாம் வாழ்வில் உண்டான எல்லாக் கயங்களையும் குணப்படுத்தி நம்மை ஆற்றி, தேற்றி அரவணைக்கின்ற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார் இப்பொழுது என் புருசன் என்னை நேசிப்பார் என்று சொல்லி அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்” (ஆதி 29:32)
அற்ப்பமாய் எண்ணப்பட்ட லேயாளை கர்த்தர் கண்டு ஒரு கர்ப்பத்தின் கனியை தருகிறார்.
கர்த்தர் லேயாளை கர்ப்பம் தரிக்கும்படி செய்தார் என்ற வசனத்தை நாம் சாதாரணமாய் வாசித்து விடுகிறோம். ஆனால் அதில் ஆயிரம் ஆயிரமான அர்த்தங்கள் உண்டு.
ஒரு திருமணமான பெண்ணிடம் அடுத்து எதிர்பார்க்கிற பாக்கியமே குழந்தை பாக்கியம். அதுவும் பழைய ஏற்பாட்டின் காலத்தில் சந்ததியை தேவன் இன்னும் மேன்மைப்படுத்திருந்தார். தேவன் முற்பிதாக்களை ஆசீர்வதிக்கும்போது சந்ததியை குறித்தே தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்.
ஆபிரகாமை ஆசீர்வதிக்கும் போது முதல் ஆசீர்வாதமே “உன்னை பெரிய ஜாதியாக்குவேன்” (ஆதி 12:1). ஈசாக்கை ஆசீர்வதிக்கும் போது உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் என்று ஆதியாகமம் 26:3 ல் பார்க்கிறோம். யாக்கோபு வனாந்தரத்தில் ஒன்றுமே இல்லாதவனாய் படுத்து இருக்கின்ற போது உன் சந்ததிக்குள் பூமியின் வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று சொல்லிவிட்டு நான் உன்னை எப்படி வழி நடத்துவேன் என்று சொல்கிறார்.
இந்த உலகமும் அப்படி தான் ஒரு சகோதரியை பார்த்தவுடன் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்ற முதல் கேள்வி கேட்பார்கள் அடுத்த கேள்வி நாவின் நுனியில் இருக்கும் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று கேட்பார்கள். திருமணம் ஆன சகோதரியை பார்த்து உங்களுக்கு எத்தனை வீடு இருக்கிறது, எத்தனை கார் இருக்கிறது என்று கேட்கமாட்டார்கள். எத்தனை குழந்தைகள் இருக்கிறது என்று தான் கேட்பார்கள். (இப்படி குழந்தையில்லாமல் இருக்கிற குடும்பங்களை நான் பார்க்கிறபோது ஆவியில் கலங்கி ஜெபிப்பேன்)
அப்படி என்றால் கர்ப்பத்தின் கனி என்பது அது விலையேறப் பெற்றது. அந்த விலையேறப் பெற்ற பரிசைதான் ,அற்பமாய் எண்ணப்பட்ட லேயாளுக்கு தேவன் கொடுத்தார். யாக்கோபின் பார்வையில் அற்ப்பமாய் எண்ணப்பட்டாலும் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றவளாய் இருந்தாள் லேயாள்.
என்னை நேசிப்பார்
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார். இப்பொழுது என் புருசன் என்னை நேசிப்பார் என்று சொல்லி அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள் (ஆதி 29:32) அதாவது தன் கணவனிடத்தில் நேசத்தைப் பெற ஒரு குமாரனையே பெற்றுக் கொடுத்தல்… என்னை நேசிப்பார் என்று சொல்லி என்ற வார்த்தையை ஆழமாய் சிந்தித்து பார்த்தால் கொஞ்சம் மனசுக்கு வலியாகதான் உள்ளது. ஏனெனில் எந்த அளவுக்கு யாக்கோபினிடத்தில் லேயாள் நேசத்தை எதிபர்ர்த்திருப்பாள்.
சகோதரியே! நம்முடைய கணவன் ஒரு நாளில் நேசத்தை காட்டுவதற்கு பதில் வெறுப்பை காட்டிவிட்டால் எத்தனை வேதனைபடுகிறோம் ஆனால் லேயாளுடைய வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் எத்தனை நாள் யாக்கோபின் நேசத்திற்கு ஏங்கி இருந்திருப்பாள் என்று தெரியவில்லை.
அவள் கர்ப்பம் தரித்திருந்த நாளில் சும்மா இருந்திருக்கமாட்டாள் எத்தனையோ வேலைகளை செய்திருப்பாள். ஒரு வேளை நேசிக்கிற கணவனாக இருந்தால் நீ கர்ப்பினி பெண்ணாக இருக்கிறாய் அதிக சுமைகளை சுமாக்க வேண்டாம் என்று அணைத்திருப்பார். லேயாளுக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ என்னவோ தெரியவில்லை ஆனால் வயிற்றில் ஒரு சுமையோடு ஒவ்வொரு வேலைகளைச் செய்யும் போது இப்பொழுது என் கணவர் என்னை நேசிப்பார் என்று ஏங்கியிருக்ககூடும். பிள்ளைபேறுக் காலத்திலும் அந்த வேதனைகளுக்கு மத்தியிலும் இப்பொழுது என் கணவர் என்னை நேசிப்பார். நேசிப்பார் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அந்த வேதனையான சுமைகளும் சுகமாகவே உணர்ந்திருப்பாள்.
சகோதரியே! லேயாள் தன் கணவனின் நேசத்தைப் பெற எந்த விலைகிரயத்தையும் கொடுக்க ஆயத்தமாய் இருந்தாள். யாக்கோபின் நேசத்தை பெற தன்னையே விற்றுப் போட்டள் என்று தான் சொல்ல முடியும். ஆனால் லேயாள் யாக்கோப்பின் நேசத்தைப் பெற்றாளா என்பது கேள்வி குறிதான்.
சகோதரியே! இன்றைக்கு நாமும் கூட கணவனின் நேசத்தைபெற எத்தனையோ விலைகிரையம் செலுத்துகிறோம். இன்று ஒரு சிலர் தன் கணவன் தன்னை நேசிக்க வேண்டும் என்பதற்காக ஜெபத்தை மறந்து, வேதத்தை மறந்து, ஆலயத்தை மறந்து கடைசியில் தேவனையே மறந்துவிடுவார்கள்.
ஏன் ஆலயத்திற்கு வரவில்லை என்று கேட்டால் என் கணவனுக்காக வீட்டில் இருந்துவிட்டேன் என்பார்கள், இப்படி எல்லாம் தேவனை அசட்டைப் பண்ணி நேசிக்கின்ற நேசமெல்லாம் ஒரு நாள் மாறிவிடும். கணவனை நேசியுங்கள். ஆனால் தேவனுக்கு மேலாக நேசிக்காதிருங்கள்,தேவனுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை தேவனுக்கு கொடுங்கள். கணவனுக்கு கொடுக்க வேன்டிய நேரத்தை கணவனுக்கு கொடுங்கள், பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பிள்ளைகளுக்கு கொடுங்கள்.
நேசத்திற்கு ஏங்கும் நேசர்
எனக்கு அநேக ஆவிகுரிய அக்காமார்களை தேவன் தந்திருக்கிறார். ஒரு நாள் ஒரு அக்காவுடன் பேசிக்கொண்டிருந்த போது தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள், அக்கா திருமணமான புதிதில் தன் கணவனிடத்தில் அதிக நேசத்தை எதிர் பார்த்தார்கள். தன் கணவர் எப்போதும் என்னோடு இருப்பார், என்னோடு பேசிக்கொண்டேயிருப்பார், என்னோடு அதிக நேரத்தை செலவழிப்பார் என்றெல்லாம் எதிர்பார்த்தார்கள். ஆனால் எல்லாம் எதிர்மறையாக இருந்தது.
அண்ணன் ( அக்காவின் கணவன்) ஒரு பெரிய சபையின் போதகாராய் இருந்தபடியால் ஊழிய வேலையாக அடிக்கடி வெளியில் போய் விடுவார்கள். அந்த நாட்களில் எல்லாம் அக்கா தனிமையே உணர்ந்தார்கள். இதையே நினைத்து நினைத்து ஏங்கி கொண்டிருந்த நாட்களில் இயேசு கிறிஸ்து ஒரு நாள் அக்காவை பார்த்து உன் கணவன் உன்னை நேசித்து உன்னுடன் இருப்பதில்லை உன்னுடன் அதிகம் பேசுவதில்ல என்று ஏங்குகிறாயே நீ என்னோடு நேரத்தை கழிப்பதில்லை என்றும் உனக்காக நான் எத்தனை நாள் ஏங்கியிருக்கிறேன் தெரியுமா? என்றார். அந்த சத்தத்தை கேட்டவுடன் அக்காவின் கண்களில் தாரை, தாரையாக கண்ணீர் வந்தது. உடனே தன்னை தேவனுடைய சமூகத்தில் அர்ப்பணித்தார்கள்.
அன்றைக்கு தேவனோடு நடக்க பழகினார்கள். இன்றைக்கு அநேக ஜனங்களை கர்த்தருக்குள் நடத்துகிற பெரிய சபையின் தலைவியாக இருக்கிறார்கள். இன்றைக்கு அண்ணன் அக்காவைப் பார்த்து சொல்லுகிறார் நீ என்னோடு நேரத்தை செலவழிப்பதில்லை என்று சொல்லுகின்ற அளவுக்கு கர்த்தர் மேன்மை படுத்தி இருக்கிறார்.
சகோதரியே! நாம் கணவனிடத்தில் உண்மையான நேசத்தை எதிப்பார்க்கிறது போலவே நம்மை உருவாக்கி பெயர் சொல்லி அழைத்து நமக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்த தேவனும் நம்மிடத்தில் உண்மையான நேசத்தை எதிர்பார்க்கிறார்.
உங்கள் கணவன் உங்களிடம் ஒருமணி நேரம் பேசவேண்டும் என்று எதிப்பார்த்தால் நீங்கள் தேவனோடு இரண்டு மணி நேரம் பேசுங்கள் உங்கள் அன்பை தேவனிடத்தில் வெளிப்படுத்துங்கள்.
உம்மை நேசிக்கிறேன் என்று இயேசப்பாவைப் பார்த்து அடிக்கடி சொல்லுங்கள் நீங்கள் அப்படி சொல்லும் போது அவருடைய நேசம் உங்களில் வந்து இறங்கும். உங்கள் முகம் அவருடைய நேசத்தால் நிரையும், பின்பு உங்கள் கணவன் உங்கள் முகத்தைப் பார்க்கும் போது இயேசுவின் நேசம் உங்கள் கணவன் சந்திக்கும். அந்த இயேசுவின் நேசமே உங்களை நேசிக்க வைக்கும்.
என்னுடைய வாலிப நாட்களிலே இயேசுவை நேசிக்க ஆரம்பித்தேன். உம்மை நேசிக்கிறேன் என்று சொல்லுவேன். த்ருமணமான பின்பும் இயேசுவே உம்மை நான் நேசிகிறேன் என்று சொல்லுவேன் . இயேசுவும் என்னைப் பார்த்து நானும் உன்னை நேசிகிறேன் என்று சொல்லுவார். நான் உடனே உம்முடைய நேசத்தை நீர் எனது கணவன் மூலமாய் எனக்கு வெளிப்படுத்தும் என்று அடிக்கடி சொல்லுவேன்.
நான் எதிர்ப்பார்த்ததைப் போலவே தேவன் என்னை நேசிப்பதை என் கணவன் மூலமாய் அறிந்திருக்கிறேன். நான் மனம் உடைந்த நேரத்திலும், கண்ணீருக்கு மத்தியிலும் தேவன் என்னை தேற்றுவதையும், என்னை தொடந்து உற்சாகப்படுத்துவதையும் என் ஆவியில் அறிந்திருக்கிறேன்,. இதற்காக என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
சகோதரியே எந்த சூழ்நிலையிலும் தேவனை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் அவருடைய நேசத்தை இழந்து விடாதிருங்கள். அவரை நேசிக்கிற நேசத்தை வெளிப்படுத்த அவரோடு நேரத்தை செலவழியுங்கள். அவருக்காக ஏதாவது ஒரு விதத்தில் ஊழியம் செய்யுங்கள். யாக்கோபினிடத்தில் நேசத்தைப் பெற லேயாள் தன்னையே விற்றுப் போட்டாள். நீங்கள் உங்கள் தேவனுக்கு உங்களை விற்றுப் போடுங்கள் இம்மையிலும் மறுமையிலும் நூருமடங்கு பலன் வரும் “தேவனை நேசியுங்கள் நேசத்தை பெறுவீர்கள்”
- சகோதரி ஜாகுலின் ஜான்சன்
இயேசுவே ஆறுதல் ஊழியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)